
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மற்றைய கட்சிகளுடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்த சபையின் புதிய முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக தன்னை தெரிவு செய்வதற்கான நகர்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் சிறப்பான ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் வெளிப்படையாக கலந்தாலோசித்து நல்லதோரு ஆட்சி அமைப்போம் என்பதனை கூற முடியும் என்று மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.