யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், பொலிஸாருடன் இராணுவமும் இணைந்து போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ். வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளமொன்றைத் திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவம் நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அது எதிர்காலத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் வடபகுதி மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார நடைமுறைகளை நேர்த்தியாகக் கடைபிடித்து வருவதன் காரணமாக, இலகுவாக கொவிட்- 19 பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், மக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.