October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 2 மில்லியன் யூரோ நிதியுதவி

இலங்கையில் கொவிட்-19 பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளின் திறனை அதிகரிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன 2 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளன.

கொரோனா நோயாளர்களின் பராமரிப்பு, தொற்றுநோய்த் தடுப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் மேம்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் ஜைபி மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியான வைத்தியர் ரசியா பெண்ட்சே ஆகியோர் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் இந்த நிதியுதவிகளைக் கையளித்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட நோயாளர் பராமரிப்பு செயல்முறைகளை உருவாக்குவது சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவியாக அமையும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் ஜைபி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிதியுதவியானது, பாதிக்கப்பட்ட மக்களின் சமூக நகர்வுகளை ஊக்குவித்து, சமூக அளவிலான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவுமென்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் ரசியா பெண்ட்சே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்த நிதியுதவி, சர்வதேச கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கெதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.