January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீ விபத்து ஏற்பட்ட உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதியை சஜித் பிரேமதாஸ நேரில் பார்வையிட்டார்

இலங்கையில் இன்று மாலை தீப் பரவல் ஏற்பட்ட உயர்நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நேரில் பார்வையிட்டார்.

அதிரடிப் படையினர் மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கடும் பாதுகாப்புடன் இன்றிரவு அங்கு சென்ற சஜித் பிரேமதாஸ,  தீப் பரவல் ஏற்பட்ட உயர்நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியைச் சுற்றிப் பார்வையிட்டார்.

அவர் அங்கிருந்து வெளியேறும்போது, ஊடகங்களிடம் தீப் பரவல் தொடர்பில் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

“உயர்நீதிமன்றத்தில் தீப் பரவல் எப்படி ஏற்பட்டது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பில் நீதியான விசாரணையை அரசு உடனடியாக நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.