மன்னார் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் குறித்த வரவு – செலவு திட்டம் சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபையில் ஏற்பட்ட வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் வரவு – செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
குறித்த வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் இணைந்து குறித்த வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 09 உறுப்பினர்கள் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்ததோடு, மேலும் ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்த வரவு – செலவு திட்டமானது ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.