
file photo: Twitter/ U.S. Embassy Colombo
இலங்கையின் குறைவான ஈடுபாடு காரணமாகவே எம்சிசி நிதியுதவித் திட்டம் நிறுத்தப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
‘மிலேனியம் செலேஞ் கோப்ரேஷன்’ இலங்கைக்கான நிதியுதவித் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகம் அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்களுக்கு நிதியுதவி வழங்கவே எம்சிசி முன்வந்திருந்ததாகவும், இலங்கையின் குறைந்த ஈடுபாடு காரணமாக தகுதியுள்ள வேறொரு நாட்டை குறித்த திட்டத்தில் உள்வாங்கிக்கொள்வதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எம்சிசி அபிவிருத்தித் திட்டம் உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுடன் 13.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 38 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு, இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் நட்பு நாடாக இருந்து, கொவிட்- 19 மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களில் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது’ என்றும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.