இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று முதன்முறையாக கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு தயாரித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேர்தல்களில் முன்கூட்டியே வாக்களித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டமூலங்களை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பது குறித்தும் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.