January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான 480 மில்லியன் டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய எம்சிசி தீர்மானம்

இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஐந்து வருட காலப்பகுதிக்கான 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்தொகையை இரத்து செய்வதற்கு அமெரிக்காவின் எம்சிசி எனப்படும் ‘மிலேனியம் செலேஞ் கோப்ரேஷன்’ தீர்மானித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற எம்சிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எம்சிசி ஊடாக ஐந்து வருட திட்டத்தின் கீழ் இலங்கையின்  சில துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா தீர்மானித்திருந்தது.

எனினும், இந்த ஒப்பந்தத்தினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி தற்போதைய அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துள்ள நிலையிலேயே இலங்கைக்கான உதவிக் கொடுப்பனவை இரத்துச் செய்ய எம்சிசி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த உதவித் தொகையை வேறு நாடுகளுக்கு வழங்க எம்சிசி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.