இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
4 ஆண்களும், 2 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கொழும்பு மாவட்டத்தையும், ஒருவர் களுத்துறை மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு – 15ஐச் சேர்ந்த 85 வயது ஆண், கொழும்பு – 14ஐச் சேர்ந்த 60 வயது பெண், கொழும்பு – 15ஐச் சேர்ந்த 84 வயது ஆண், களுத்துறை – பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 73 வயது பெண், கொழும்பு – 14 ஐச் சேர்ந்த 65 வயது ஆண், கொழும்பு – 09ஐச் சேர்ந்த 48 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 31 ஆயிரத்த 70 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இலங்கையில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 25 ஆயிரத்து 652 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 920 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.