கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று ஏற்பட்ட தீ பரவல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியசட்சர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவென 3 குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டன.
இந்த நிலைமையில், தீ பரவியமை தொடர்பில் நிர்வாகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மின் பொறியியலாளர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பரிசோதனைகளை நேற்று மேற்கொண்ட நிலையில், இன்றும் இரசாயன பகுப்பாய்வாளரினால் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகள் விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயதுன்னே தெரிவித்துள்ளார்.
கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள களஞ்சியசாலையிலேயே தீ பரவியதாகவும், தீயினால் ஆவணங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் நீதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.