November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி: பதவியை இழக்கிறார் முதல்வர் ஆர்னோல்ட்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும், இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
45 உறுப்பினர்களை கொண்ட யாழ். மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினருமாக உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 24 பேர் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதனால், குறித்த மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், கடந்த 2 ஆம் திகதி முதல் தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட போது, 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.