July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் சாம்பியனாகப் போவது யார்?

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குஷிப்படுத்திக் கொண்டிருந்த எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடர் நிறைவை எட்டியுள்ளது.
தொடரில் சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி கிலெடியடர்ஸ் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை சகலதுறை வீரரான திசர பெரேராவும், காலி கிலெடியேடர்டஸ் அணியை இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான பானுக ராஜபக்ஸவும் வழிநடத்துகின்றனர்.
ஜப்னா அணியில் பாகிஸ்தானின் சொஹைப் மாலிக், மேற்கிந்தியத் தீவுகளின் ஜொன்சன் சாள்ஸ், இலங்கையின் திசர பெரேரா,தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, அவஸ்க பெர்னாண்டோ உள்ளிட்ட சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் போட்டியை தனியாக வெற்றிகொள்ளும் திறமை படைத்தவர்கள்.
இவர்களுடன் யாழ்ப்பாணத்து இளம் வீரர்கள் நால்வர் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு இறுதிப்போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.வனிந்து ஹசரங்க ஜப்னா அணியின் நம்பிக்கைக்குரிய வீராவார்.
இவ்விரண்டு அணிகளுக்கிடையில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஜப்னா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
அதற்கு முன்பு நவம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற முதல் போட்டியிலும் ஜப்னா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
அந்த வகையில் அந்த இரண்டு தோல்விகளையும் ரூடவ்டு செய்யும் வகையில் காலி கிலெடியேடர்ஸ் அணி விளையாடவேண்டிய நிர்ப்பந்தம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம் பானுக ராஜபக்ச, தனுஸ்க குணதிலக நம்பிக்கைக்குரிய வீரராக இருக்கிறார். பந்துவீச்சில் சாதிக்க மொஹமட் அமீர் காத்திருக்கிறார். தற்போதைய நிலையில் சற்று பலம் குன்றியதாகவே காலி அணி உள்ளது.
இந்தப் போட்டித் தொடரைப் பொறுத்தவரை லீக் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றிபெற்ற கலம்போ கிங்ஸ் அணி அரை இறுதியில் தோல்வியடைந்தது.
அதேபோன்று 2 போட்டிகளில் வெற்றிபெற்ற தம்புள்ள அணியும் அரை இறுதிக்கு தகுதிபெற 2 வெற்றிகளுடன் கண்டி அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது.
இதனால் எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் முற்றுமுழுதாக அதிர்ஷ்டத்துக்குரியதாக அமைந்துள்ளது. எனவே இறுதிப் போட்டியில் சாம்பியனாவதற்கு அதிர்ஷடமும் மிக மிக அவசியமாகவுள்ளது.
ஜப்னா அணி அதிர்ஷ்டம் மிக்கதாகவே தென்படுகின்றது. அவர்கள் லீக் சுற்றில் முதல் 4 போட்டிகளையும் வென்றார்கள்.
ஆனால் காலி கிலெடியேடர்டஸ் அணியோ லீக் சுற்றில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்வியடைந்து அதன் பிறகு வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டியை உறுதிசெய்து கொண்டது.
இதனால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறப் போவது யாரென்பதை கணிக்க முடியாமல் உள்ளது. என்றாலும் போட்டிஇறுதிவரை விறுவிறுப்பாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.