File Photo: nbro.gov.lk
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, திகன பகுதியில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவரும் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நில அதிர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவால், புவி சரிதவியல் மற்றும் மற்றும் சுரங்க பணியகத்திற்கு அண்மையில் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அதன்பின்னர் 5 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன் அவர்கள் கண்டி – திகன பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகக் குறைந்த கால இடைவெளியில் அந்த பகுதியில் மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில், பூமியின் உட்புறத்தில் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் ஏற்பட்டுள்ள அழுத்தமே இதற்கான காரணம் ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நில அதிர்வுகள் காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக புவி சரிதவியல் மற்றும் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல கூறியுள்ளார்.
அண்மையில், திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல, அளுத்வத்த உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதுடன், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.