Photo: Facebook/ Champika Ranawaka
‘ஜாதிக ஹெல உறுமய’ கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அவருடன் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்த மேலும் சிலரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
கொழும்பில் இன்று ‘ஜாதிக ஹெல உறுமய’ கட்சியின் மாநாடு நடைபெற்றபோது, அங்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்சியிலிருந்து விலகியவர்கள் வகித்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஹெல உறுமய கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டதுடன் அவர்களில் சம்பிக்க ரணவக்க வெற்றிப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் கட்சியை புதிய அணியாக கட்டியெழுப்பும் நோக்கில், கட்சியின் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க இடமளித்து,தான் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.