ஜனாதிபதி கோட்டாபய அரசின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் யாவும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. உயர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நல்லாட்சியின்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது. அரச ஊழியர்கள்கூட அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கக் கூடிய சுதந்திரம் இருந்தது. இதனால் நாட்டுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன. ஆனால், இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாதுகாப்புப் பிரிவுக்கு தலைமை வகித்து, பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இருந்து தேர்தலை வழிநடத்திய நபரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஸில் ராஜபக்ஷவின் பல சித்தாந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பதவியேற்பு நிகழ்வில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளர் உரையாற்றியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினராக இருக்கின்றார்.இவ்வாறானவர்களிடம் எவ்வாறு சுயாதீனத்தன்மையை எதிர்பார்ப்பது?
அதேபோல் சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கும் வியாபாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். விலைமனு கோரல்களின்போது அரச அதிகாரிகள், இவர்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராகவும் பக்கச்சார்பாகச் செயற்படும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு புறத்தில் இராணுவ நியமனங்கள், மறுபுறத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களின் உயர் பதவிகளுக்கும், ஏனைய நியமனங்களுக்கும் அரசின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரை சஜித் பிரேமதாஸவும், கபீர் ஹாசீமும் மேற்படி நியமனங்களை நாடாளுமன்றப் பேரவையில் எதிர்த்தனர். இவ்வாறான ஆணைக்குழுக்களின் கீழ்தான் எதிர்காலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை வரும்.
இலங்கையில் இன்று ஏகாதிபத்திய ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்குச் சான்றாக, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களும் அழுத்தங்கள் மூலம் பதவி துறக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு புறத்தில் இராணுவ நியமனம், மறுபுறத்தில் அரசியல் நியமனம் என அரசின் பயணம் அமைவதால் மக்களின் ஜனநாயகம், உரிமைகள் எல்லாம் கேள்விக்குறியாகியுள்ளன. கடவுள்தான் இனி நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.