மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்திற்கு சிறைக்குள் போதைப்பொருள் மாபியாக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே காரணம் எனவும்,மஹர சிறையில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சகலரும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்ட நபர்கள் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மஹர சிறை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்தார்.
மஹர சிறை கலவரத்திற்கும் கொரோனா பரவலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது, ஆனால் சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரவியதால் அவர்கள் குழப்பமடைந்து கலவரத்தில் ஈடுபடவில்லை. இது முழுமையாக போதைப்பொருள் கும்பல்களில் கலவரமாகும். சிறைக்குள் உள்ள போதைப்பொருள் மாபியா குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலே இந்த கலவரம் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
இதற்கான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலை அதிகாரிகள் 70 பேரும், சிறைச்சாலை மருத்துவர்கள் 16 பேரும் சாட்சியமளித்துள்ளதுடன் கைதிகள் ஒரு சிலரும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அதேபோல் பொலிசார் எமக்கு வழங்கியுள்ள தகவலுக்கு அமைய இந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சகலரும் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புபட்ட நபர்கள் என்பதும், அவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே கைதிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிரத்தியேகமாக மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஆனால் கைதிகள் குழப்பமடைந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும் என்றார்.