கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் மற்றும் தென்னமரவடி, திரியாய் காணி விவகார வழக்குகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீரூற்று பகுதி வளாகத்திலுள்ள பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக மக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலயம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அந்த ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்க தவறியதால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிள்ளையார் கோவிலை அமைக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மாற்று இடமொன்றை பரிந்துரைத்துள்ள போதிலும் ஆலய நிருவாகம் அதனை நிராகரித்துள்ளது.
எனினும் ஆலய நிருவாகத்தினர் தமக்கு பொருத்தமான இடங்கள் இரண்டை அடையாளம் கண்டுள்ள நிலையில் குறித்த இடத்தில் ஆலயத்தை அமைக்க பரிந்துரைத்துள்ளனர்.
அத்தோடு ஆலய நிர்வாகம் காட்டும் பகுதியில் ஆலயம் அமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும் என இணங்கியுள்ளனர். அதற்கமைய அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைந்துள்ள தென்னமரவடி மற்றும் திரியாய் ஊர்களில் ஒரு நூற்றாண்டிற்கு கூடுதலாக தமிழ் மக்கள் வேளாண்மை செய்துவரும் வயல்களில் தொல்பொருள் இடங்கள் இருப்பதாகக் கூறி தொல்லியல் துறை தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் இதற்கு எதிராகத் தாக்கல் செய்த வழங்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த காணியில் தொல்லியல் இடங்கள் இருப்பின் அவற்றை தொல்லியல் திணைக்களம் காண்பிக்க வேண்டும்.
சுமார் ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான விவசாய பூமியில் அங்காங்கே தொல்லியல் இடங்கள் இருப்பதாக கூறி ஒட்டுமொத்த விவசாயத்தையும் நாசமாக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கக்கூடாது என பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
மேலும் குறித்த விவாச பூமியில் உண்மையிலேயே தொல்லியல் இடங்கள் இருப்பின் அவற்றை அடையாளம் காட்டினால் அந்த பகுதிகளை பாதுகாக்க தாமே நடவடிக்கை எடுப்பதாகவும், ஏனைய இடங்களில் தமது விவசாயத்தை முன்னெடுத்து செல்ல இடமளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கும் அடுத்த ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.