Photo: Facebook/ Srilanka red cross
கொரோனா தொற்றுக்கு உள்ளான 762 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 31,367 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 570 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,831 ஆக உயர்ந்துள்ளது. தற்போது7636 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காத அட்டலுகம மக்கள்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் நிலைமை அதிகரித்துள்ள போதும், அங்குள்ள மக்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் அங்கு கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது சிக்கலான விடயமாக உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை போன்று அட்டலுகம பிரதேச மக்கள் ஒத்துழைப்பதில்லை எனவும் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்தப் பிரதேசத்திற்கு பீசீஆர் பரிசோதனைகளுக்கு செல்லும் போது, பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிக மக்கள் வசிக்கும் நிலையில் நேற்றும் இன்றும் அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் மிகவும் குறைந்தளவானவர்களே கலந்துகொண்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்கரைப்பற்றில் தொடரும் ஊரடங்கு
நவம்பர் 26 ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு 16 ஆவது நாளாக தொடர்கின்றது.
இதனால் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளிச் செல்வதும், உள்வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் அன்றாட கூலித் தொழில் செய்யும் பொது மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் எவ்வித வருமானமுமின்றி கஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தங்களுக்கு நிவாரணத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்டோர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தப் பிரதேசத்தில் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு கிரமமான முறையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தோறும் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அக்கரைப்பற்று பொது சந்தையுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருகின்றது.
நாவலப்பிட்டி மாணவிக்கு கொரோனா
கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட நாவலப்பிட்டியில் மாணவி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஹப்போட் தோட்டத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவி ஒருவருக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தை ஏற்கெனவே தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடும்பத்தவர்களுக்கு மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையிலேயே மேற்படி மாணவிக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவி கற்கும் பாடசாலையின் 4 ஆசிரியர்களும் , 9 மாணவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 41 பேர் கைது
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை சுகாதார வழிமுறைகளை மீறிய ஆயிரத்து 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரேட்வெலி தோட்டத்தில் 30 பேர் தனிமைப்படுத்தல்
தெல்தோட்டை – கிரேட்வெலி தோட்டத்தை சேர்ந்த 6 குடும்பங்கள் உள்ளிட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.