May 24, 2025 16:56:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பழைய அல்லது புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராயவும்’

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர், ‘ஏற்கனவே அது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பொருளாதார மேம்பாடு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தவிசாளர் பசில் ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினர் நேற்று அலரி மாளிகையில் ஒன்றுகூடி, ஆராய்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.