இலங்கையின் மலையகத்தில் பல்கலைக்கழகமொன்று அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கூட்டுப்பண்ணை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மலையக பல்கலைக்கழகத்துக்கான இடம், கொட்டகலை ரொசீட்டா பாம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு விவசாய கல்லூரி ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும், தனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின் கனவொன்றை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் தான், இந்த இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், பிரஜா சக்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.