November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 வரவு – செலவுத் திட்டம் 151 வாக்குகளால் நிறைவேறியது

இலங்கை அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பில், 151 பேர் ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நவம்பர் 11 ஆம் திகதி வரவு செலவுத்  திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது.

அதன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. அதன்போது 99 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது.

இதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நம்பர் 23 ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் அரசாங்க தரப்பினரும் எதிரணியில் சிலருமாக 151 பேர் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 54 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

வாக்களிப்பின் போது, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.