July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையில் உயர்வு: இலங்கையின் இன்றைய நிலவரம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான  300 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 279 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 21 பேரும் சிறைச்சாலை கொரோன கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 461 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 375 ஆக உயர்ந்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 500 ஐ கடந்தது

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  9 மாத குழந்தையொன்றுக்கும் 75 வயது வயோதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்தக் குழந்தை சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குழந்தையின் பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லையென்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு விளக்கமறியல்

பொதுசுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரை செவ்வாய்க்கிழமை வழிமறித்த நெல்லியடி பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

இதன்போது அவர்கள் இருவரும் பொதுச் சுகாதார பரிசோதகருடன் முரண்பட்ட நிலையில் அது தொடர்பாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை 22 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.