April 17, 2025 16:36:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை நிதியமைச்சின் செயற்பாடுகள் இனவாத கோணத்திலேயே அமைந்துள்ளன”

“இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கிட்டத்தட்ட  ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.

http://https://youtu.be/FK2OtEqYdRA

வரவு-செலவுத் திட்டத்தின் நிதியமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், “இன்று சர்வதேச மனித உரிமைகள்  தினம். இந்த தினத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், சிறைகளில் வாடும் பிள்ளைகளை  நினைத்து கதறும் பெற்றோர் என வடக்கு-கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது” என்று கூறினார்.

“இந்த நாளில் வடக்கு- கிழக்கு எங்கும் காணாமலாக்கப்பட்ட தமது  பிள்ளைகளைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் போராட்டத்தோடு நாங்கள் கைகோர்க்கும் அதே நேரத்தில் கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” என்றும் கஜேந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் தொடர்பான  அலுவலகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்டதாகவும், அந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று உறவினர்களை ஒப்புக்கொள்ள வைத்து அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் முயற்சிதான் நடைபெறுகின்றது” என்றார் கஜேந்திரன்.

வடக்கு-கிழக்கில் முழுமையான இனவாத கோணத்திலேயே நிதி அமைச்சின் திட்டங்கள் அமைந்துள்ளதாகவும் கஜேந்திரன் கூறினார்.

“தொல்பொருள் திணைக்களம் என்பது உலக நாடுகளிலே கலாசார அமைச்சுக்களின் கீழ் உள்ளன. ஆனால் இலங்கையில் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான நிதியை நிதி அமைச்சு மூலம் ஒதுக்கிக் கொடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற, பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடுகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார் கஜேந்திரன் எம்.பி.