தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மக்கள் தங்களின் அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டுமென்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ‘எமது மக்களின் நலன் கருதிய இந்த அழைப்பை சுய இலாபங்களுக்காக புறக்கணித்துவிட வேண்டாம்’ எனவும் தெரிவித்தார்.
“வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பிவிடுகின்ற செயற்பாடுகளில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சனைகளை தீர்ப்பதைப் தவிர்த்து அந்தப் பிரச்சனைகளை மேலும் வளர்த்து விடுவதே இவர்களின் வரலாற்று செயற்பாடாக இருந்து வருகின்றது.
நாட்டில் யுத்தமொன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்குடன் அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசுவோம் என அப்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்தபோது அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன். எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் அவர்களை மதிக்கும் நிலைமையை நாட்டில் ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.