July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் சுகாதார அமைச்சினால் வெளியிட்டப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் குறித்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய பண்டிகை காலங்களில் பயணத்தை குறைத்தல், குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்தல், பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நட்பு கூட்டங்களிலிருந்து விலகி இருத்தல் என்பவற்றுடன் கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகை காலத்திற்காக ஏனையவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருப்பதுடன், அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளியை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயதானவர்கள் விரைவில் நோய்த் தொற்றுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அதிகளவான மக்கள் கூடும் பகுதிகளுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்பதுடன், வீட்டுக்கு வரும் வெளிநபர்களின் வருகையை மட்டுப்படுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்கத் தவறும் நபர்களுக்கு அல்லது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப் பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, கிடைக்கக்கூடிய இணைய விநியோக சேவைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த காலகட்டத்தில் வெளிச்செல்லும்போது முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பராமரிப்பதுடன், தொடர்ந்து கைகளை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.