January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகளை பாதுகாத்தோம்”

Photo: Facebook/ Mahinda Rajapaksa

கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மனித சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் இலங்கை 1955 ஆம் ஆண்டு மனித உரிமை சாசனத்தை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைக்கமைய நபரொருவரின் மதம், இனம், வதிவிடம், தோலின் நிறம், சொத்துக்கள் ஆகிய எதுவும் அதில் தாக்கம் செலுத்தாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், மனித உரிமை நிலையான அபிவிருத்தி நோக்கத்தின் அடிப்படையாகும் என்றும், உலகளாவிய மதிப்புகளின் அடிப்படையில் மனித உரிமை ஊடாக சமத்துவம், கௌரவம், ஸ்திரத்தன்மை, பங்களிப்பு, பொறுப்புக்கூறல், பின்னூட்டல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய முக்கிய விடயங்களின் முக்கியத்துவம் குடிமக்களின் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மனித உரிமையைப் பாதுகாப்பதன் ஊடாக தனிநபர் வளர்ச்சி போன்றே உலகம் என்ற ரீதியில் ஐக்கியத்துடன் முன்னோக்கி செல்ல முடியும் என்று கூறியுள்ள அவர், மனித உரிமைகள் தினமானது வெறும் தத்துவ பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படாத நடைமுறை பயன்பாட்டு முக்கியத்துவ அடையாளம் காணப்பட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமையை தாம் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும், குடிமக்களினதும் நற்பேறுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உரிமைகளை அனுபவிப்பது போன்றே, அதனுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் முகங்கொடுத்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போன்றே, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றி கொண்டு, தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.