January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி விரைவில் முடிவு ‘

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடனான இன்றைய சந்திப்பின்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிரணியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம், குறித்த உறுப்பினர்களால் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதிக்குரிய கடிதத்தை அவரிடம் நான் சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்று விரைவில் எடுக்கவுள்ளோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கிணங்க, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் அவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.