“நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.அதனை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். எமது ஆட்சிக்காலத்தில் நீதிமன்றம் சுயாதீனமாக இருந்ததால்தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிகின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2015 இல் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்கள் எம்மிடம் அபிவிருத்தியைக் கேட்கவில்லை. மாறாக இல்லாமல் போயிருந்த நீதிமன்ற சுயாதீனத்தன்மையை ஏற்படுத்துமாறே கோரினர்.
ஏனெனில் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நீதிமன்றத் தீர்ப்புகள் எவ்வாறு இருந்தன என்பது மக்களுக்குத் தெரியும். பிரதம நீதியரசர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு ஒரு நாளில் அவரை வீட்டுக்கு அனுப்பிய வரலாறு இலங்கைக்கு இருக்கின்றது.
அதேபோன்று 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டின் ஊடக சுதந்திரம் முற்றாக இல்லாமல் போயிருந்தது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். அதனால் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். அதேபோன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. அந்த நிலைமையை மாற்றியமைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி 10 சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தோம். அதன் மூலம் அரச திணைக்களங்கள் சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுத்தோம்.
நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாக்க, அரசமைப்பு சபையை ஏற்படுத்தி அதன் மூலம் பிரதான நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.
அரசமைப்பு சபையில் ஆளும், எதிர்க்கட்சி, சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை அதில் உறுப்பினர்களாக நியமித்தோம். எமது ஆட்சியில் நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தியதால்தான் கோட்டாய ராஜபக்ஷவுக்கு இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிகின்றது என்று அவர் தெரிவித்தார்.