May 5, 2025 19:04:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு 15 தமிழ் எம்.பிக்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டுக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதிக்குரிய இந்தக் கடிதம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிறைகளில் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், எஸ்.வினோநோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், வே.இராதாகிருஷ்ணன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தவராசா கலையரசன் உள்ளிட்ட 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஜனாதிபதிக்குரிய கடிதமும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.