இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழந்து, உரிமை கோரப்படாத உடல்களை எரிப்பதற்கு சட்டமா அதிபர் சுகாதார அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், உடல்களை எரிக்க முடியுமா? என்று சுகாதார அமைச்சு, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியிருந்தது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய உரிமை கோரப்படாத உடல்களை எரிக்க முடியுமென்று சட்டமா அதிபர் தப்புள டி லிவேரா பணிப்புரை வழங்கியுள்ளார்.
இலங்கை முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தவர்கள் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி வருகின்றனர்.
அதுதொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இறுதிக் கிரியைகளுக்கான அனுமதியை வழங்க மறுத்து வருகின்றனர்.
இதனால், இதுவரையில் கொரோனா காரணமாக உயிரிழந்த 19 பேரின் உடல்கள் எரிக்கப்படாமல் உள்ளன.
சட்டமா அதிபரின் பணிப்புரையைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபை குறித்த உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.