January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்: இலங்கையின் இன்றைய நிலவரம்

நுவரெலியா, லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய  தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அக்கரபத்தனை தோட்டப்பகுதியில் அறுவருக்கும், கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை தோட்டத்தில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அக்கரபத்தனை தோன்பீல்ட் பிரிவு முடக்கப்பட்டது

அக்கரபத்தனை – எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று முதல்  முடக்கப்பட்டுள்ளது.

தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில் பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளதுடன், நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே,  வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மறுஅறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தோட்டத்தில் சுமார் 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே தனிமைப்படுத்தலை தொடர்வதா, தளர்த்துவதா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்று 694பேருக்கு தொற்று – 542 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 694 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 30,072 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினத்தில் சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,800 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து 655 நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 655 இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சவூதி அரேபியாவிலிருந்து 293 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 193 பேரும், கட்டாரிலிருந்து 111 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலங்களில் 30 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 30 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை 1,181 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.