July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தினாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்’

photo: Facebook/ Mathiaparanan Abraham Sumanthiran

இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்ட இழுத்தடிப்புகள் காணப்படுகின்றதன் காரணமாகவே, நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றதாகவும், அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும் என்றும் சுமந்திரன் விமர்சித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் 1983, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன், ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் உட்பட திருகோணமலையில் 5 மாணவர்கள், குமரபுரத்தில் 24 பேர், மூதூரில் 17 ஏசிஎப் தொழிலாளர்கள், கொழும்பில் 11 இளைஞர்கள், 34 தமிழ் ஊடகவியலாளர்கள், லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெளிகொட போன்றோர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து நீதி நிலைநாட்டப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படுகொலைகளுக்கு சிலநேரங்களில் நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்படுவதால், நீதித்துறை ஏதோவொரு வகையில் இயங்குகின்றது எனக் கருத முடியுமாக இருந்தாலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் ஊடாக குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மோசமான, சர்வதேச குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தினாலேயே சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றதாகவும், அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.