July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெனிங்,பேலியாகொட சந்தைகளை திறக்க நடவடிக்கையெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை

மெனிங் சந்தை மற்றும் பேலியாகொட மீன் சந்தை என்பன மூடப்பட்டுள்ளமையானது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பொருளாதாரத்தை நேரடியாக பாதித்துள்ளதாகவும், இதனால் குறித்த சந்தைகளை திறப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவற்றை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கும் போது, சுகாதாரத்துறையினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கடைப்பிடிக்குமாறும், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் பேலியாகொட நகர சபையில் போதிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இல்லாவிடின், ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கலந்துரையாடலின் போது, பேலியாகொடவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெனிங் சந்தை கட்டிடத் தொகுதியில் விற்பனை நிலையங்களை விநியோகிப்பதில் எழுந்துள்ள பிரச்சனை தொடர்பில் கருத்து கோரப்பட்டுள்ளது.

மெனிங் சந்தையில் பழைய விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு புதிய விற்பனை நிலையங்கள் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் புதிதாக எவருக்கும் விற்பனை நிலையங்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மெனிங் சந்தை மற்றும் பேலியகொட மீன் சந்தைகளில் கொரோ கொத்தணிகள் இனங்காணப்பட்டதையடுத்து குறித்த சந்தைகள் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.