July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீனவர்கள் இலகு முறையில் படகுகளைக் கொள்வனவு செய்ய திட்டங்கள் தேவை’

கேள்விகளுக்கான பதிலோடு, செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தமது அமைச்சின் ஊடாக பல விடயங்களைச் செய்வதாகக் கூறினாலும், அமைச்சுக்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, ‘நான் செய்வதைச் சொல்பவன், சொல்வதைச் செய்பவன்’ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளார்.

அத்துடன், மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டாவது, இந்த விடயங்களைச் செய்து முடிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ‘நீங்கள் ரஜினிகாந்தைப் போன்று, நான் செய்வதைச் சொல்வேன், சொல்வதைச் செய்வேன் எனக் கூறியுள்ளீர்கள். அப்படி நடந்தால் மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 130 கிலோ மீட்டர் கரையோரப் பிரதேசத்தைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 375 ரோலர் படகுகளே காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் கூறியுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அனைத்தும் நிர்மாணிக்கப்பட்டாலும், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட மீனவர்கள் ரோலர் படகுகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் இலகு முறையில் படகுகளைக் கொள்வனவு செய்வதற்கு மீன்பிடித்துறை அமைச்சு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.