எதாவது ஒரு வகையில் பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்பவர்களுக்கு எதிராக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலஞ்ச ஊழல் கலாசாரத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கி கொடுப்பதற்காக அணி திரளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடியானது அபிவிருத்திக்கு பாரிய தடையாக காணப்படுவதுடன், எத்துறையாயினும் ஊழல் மோசடியானது நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் தடைகளை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக சிறந்த முறையில் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு எதிராக முகம் கொடுப்பது நாட்டு மக்கள் அனைவரினதும் பொறுப்பாகுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் இதனை சிறந்த முறையில் விளங்கி பொறுமையுடன் செயற்படுவார்களாயின் ஊழலை முற்றுமுழுதாக தோற்கடிக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக நாட்டு மக்களை பலப்படுத்துவதற்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, வீண் விரயம், ஊழலை எதிர்த்தல், போன்றன தமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச துறையின் மூலம் செயற்திறன் மிக்க சேவையை பெற்றுக்கொள்ளும் உரிமை குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொதுமக்கள் சிறந்த முறையில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேநேரம், இலஞ்சம் பெறுபவர்கள் குறித்து, பொதுமக்கள் கூடிய அவதானத்துடன் செயற்படுவது, நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குரிய பாரிய பொறுப்பாக அமைவதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.