July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தடுப்புக்காக ‘உள்நாட்டு சிகிச்சை முறைகளை’ உருவாக்குவதில் அரசாங்கம் நம்பிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, உள்நாட்டு சிகிச்சை முறைகளை உருவாக்குவதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவ நடைமுறைகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ துறையினரிடம் கலந்தாலோசித்து, சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறுமிடத்து, அவற்றை உற்பத்தி செய்து, விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இதனை இலங்கையில் கொரோனா தடுப்புக்கான குறுகிய கால தீர்வாக வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெறுவதற்கு, உலக சுகாதார அமைப்புடன், சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உலக சுகாதார அமைப்பிடம் கொரோனா தடுப்பூசியைக் கோரியுள்ளதாகவும், இலங்கைக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை வகுப்பதில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 3 தொடக்கம் 6 மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.