(file photo: www.army.lk)
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றும் வாகன சாரதி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே, பொலிஸ்மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பொலிஸ் தலைமையக அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதால், நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு சபை ஒன்றுகூடலிலும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள 150 அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 1500 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.