July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,455 பேர் பாதிப்பு

புரவி சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாகவும் 40 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்தோடு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 237 குடும்பங்களைச் சேர்ந்த 805 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேநேரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்களை மதிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.