கேகாலை பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மருத்துவரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா ஒழிப்பு மருந்து விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டு கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரினால் குறித்த மருந்து விநியோகிக்கப்பட்டது.
கேகாலை – உடுமாகம பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து நேற்று குறித்த மருந்தினை பொதுமக்களுக்கு அவர் இலவசமாக விநியோகித்தார்.
மருந்தினை பெற்றுக் கொள்வதற்காக அதிகளவான பொதுமக்கள் அங்கு சென்றிருந்த நிலையில், இதன்போது மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தினால் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இதேவேளை, ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவுக்கும், பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் கேகாலை மாவட்ட செயலகத்தில் நேற்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்ட பின்னர், மருந்தை விநியோகிக்கும் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 7, 600 குடும்பங்கள் இந்த மருந்தினை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள ஆயுர்வேத மருத்துவர், மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்காக அதனை விநியோகிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுர்வேத மருந்தினால் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைவதாக குறித்த ஆயுர்வேத மருத்துவர் தெரிவிக்கின்ற போது, அது விஞ்ஞான ரீதியாக, அதிகாரம்பெற்ற தரப்பினரால் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த மருந்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சிபாரிசு கிடைக்குமாக இருந்தால் மருந்தினை மீண்டும் விநியோகிக்க ஆயுர்வேத மருந்துவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.