October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை’

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காணொளி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றபோது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தாம் வகிக்கும் அரசியல் நிலைப்பாட்டால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையே அரசியல் கைதிகள் என விளிக்க முடியும். இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை.

எனவே, அரசியல் கைதிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் எண்ணிக்கையும் பூஜ்ஜியம் என்ற பதிலையே வழங்க முடியும்.

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அது அடிப்படை உரிமையாகவும் அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்தி எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் நீங்கள் கூறும் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆக, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயம் ஆளுந்தரப்பில் ஏற்புடைய காரணியல்ல.

அதேவேளை, குற்றச்சாட்டுக்களின் தன்மை அடிப்படையிலேயே கைதிகள் வகைப்படுத்தப்படுகின்றனர். எனவே, தமிழ்க் கைதிகள், முஸ்லிம் கைதிகள், சிங்களக் கைதிகள் எனக் கைதிகளை இன ரீதியில் வகைப்படுத்தக்கூடாது.

தண்டனை குறைப்பு, பொதுமன்னிப்பு என்று அனைத்து விடயங்களும் எல்லாக் கைதிகளுக்கும் பொருந்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.