
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு மேலும் காலதாமதம் ஏற்படும் என நான் நம்புகின்றேன் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் சட்டமா அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் இதுவரை சட்டமா அதிபருக்கு கிடைக்கவில்லை.
இந்த அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு கிடைத்ததன் பின்னரே, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சந்தேகநபர்கள் மீது வழக்குத் தொடர முடியும்.
இதனால், இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு மேலும் சில காலம் எடுக்கக்கூடும்.
எனினும், இந்தத் தாமதத்தைத் தவிர்த்துக்கொள்வதற்காக சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகளுடனான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் யார் என்பதை நான் நிச்சயமாகக் கண்டறிவேன்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் வெளிநாடுகளிலும் உள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.