January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலவச கொரோனா மருந்து’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து விகாரையில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர்

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக மருந்து இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கேகாலை பிரதேச பௌத்த விகாரையொன்றில் ஆயிரக் கணக்கானோர் ஒன்றுகூடியுள்ளதாகத் தெரியவருகின்றது.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த கிராமிய மருத்துவர் தம்மிக பண்டார கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிரான மருந்து இன்று இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கேகாலை ஹெட்டிமுள்ள பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் ஒன்றுகூடியுள்ளனர்.

கிராமிய மருத்துவர் தம்மிக பண்டார தேசிய மூலிகைகளால் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார்.

குறித்த மூலிகை மருந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் நாளொன்றுக்கு இரு மேசைக் கரண்டிகள் வீதம் மூன்று நாட்களுக்கும், நோய்த் தொற்று ஏற்படாதவர்கள் நாளொன்றுக்கு இரு மேசைக் கரண்டிகள் வீதம் இரண்டு நாட்களுக்கும் அருந்தினால், கொரோனா தொற்று ஏற்படாது என்று தம்மிக பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த மருந்தைப் பெற்றுக்கொள்ள ஆயிரக் கணக்கானோர் ஒன்றுகூடியதில், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

மருந்து விநியோக நடவடிக்கை காரணமாக கொழும்பு, கண்டி பிரதான வீதியில் 2 கிலோ மீட்டர் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், இவ்வாறான ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்ய அனுமதி வழங்கியமை குறித்து, கேகாலை மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.