July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொரோனா குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம்” : இலங்கையின் இன்றைய நிலவரம்

Photo: Twitter/ Srilanka Red Cross

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களிடையே தேவையில்லாத அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக  ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதனால் சிலர் தமக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் அதனை மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது என்றும்  இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வே, தொற்றுக்கு உள்ளான நபர்களை சமூகத்திற்குள் ஒதுக்கி வைத்துப் பார்க்கும் நிலைமையை ஏற்படுத்துவதாகவும்,  இதன் காரணமாக மக்களுக்கு தொடர்ந்தும் இது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்து அவர்களிடையே அந்த அச்சத்தை போக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கொவிட் 19 பற்றிய மீளாய்வுக் குழுக் கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் போது பொருளாதார பற்றாக்குறையில் உள்ளவர்களின் நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தி, அவ்வாறானவர்களின் உடல்களை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் அந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று 797 பேருக்கு தொற்று

இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,378 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 454 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கிசிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் குணமடைந்து இன்றைய தினத்தில் வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,258 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 703 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் 371 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 64 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று 

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 20 நாள் குழந்தையொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது நிமோனியா நிலைமையில் இருந்தாகவும், அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனபோதும் பெற்றோரிடம் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லையென தெரியவந்துள்ளதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

6,878 பேர் தனிமைப்படுத்தலில்

முப்படையினரால் நடத்தப்படும் 64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர் தற்போது தனிமைப்படுத்தப்படுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றியவர்களில் 7,634 பேர் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த  45,509 இலங்கையர்கள் இதுவரையில்  நாடு திரும்பியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 58,892 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாகவும் வெளிநாடுகளிலுள்ள தூதுவராலயங்களில் அவர்கள் தம்மைப்பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 31ஆம் திகதி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் 33,063 பேரும் மத்தள விமான நிலையத்தினூடாக 12,446 பேரும் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம், மாலைதீவு, இந்தியா அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்தே அதிகமானோர் நாடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா ஆடைகள் நீரோடையிலிருந்து மீட்பு

கிரிதலே, பக்கமூன பிரதான வீதியின் கபர போக்குவ பிரதேசத்தின் நீரோடையில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையின் போது அணிவிக்கப்படும் பாதுகாப்பு ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அவற்றை எடுத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்தில் இருந்து சில கண்ணாடிப் போத்தல்களும் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீரோடையின் நீர் கிரிதலே குளம் வரைக்கும் செல்வதுடன், பொது மக்களும் இந்நீரை பயன்படுத்தும் நிலையில், இந்த ஆடையால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.