முறையான சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் இன்றி நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னர் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வரும் போது, அவர்களுக்கு இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பான அறிமுகமொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்டிஜன் பரிசோதனையொன்றை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளுடனேயே இலங்கைக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.