
தான் உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சியுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (08) செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஆனந்தசங்கரி இதனைக் கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால், யுத்தத்தை நிறுத்த அவர்கள் விரும்பவில்லை.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். இந்த நிலையில், அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் எந்தக் காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன்.
ஆனால், இணைப்பதற்கு அவர்கள் தற்போது மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் கைகூடாது. இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் தங்களுடைய பதவிகளைத் துறக்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.