July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு” திட்டத்தை ஆரம்பிக்க பிரதமர் பணிப்புரை

கிராமிய மற்றும் நகர்ப்புற பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, “வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு” திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராம மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கை மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் மக்களுக்கான முன்னுரிமைப் பட்டியலொன்றை தயார்ப்படுத்துவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானமீட்டும் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கான சம்பள விடயங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் மற்றும் சமூர்த்தி அதிகாரிகளுக்கு தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குவது தொடர்பிலான பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்துக்கு நிதி அமைச்சின் ஆதரவை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, ரஞ்சித் பண்டார, குணபால ரத்னசேன, பிரமித பண்டார, டபிள்யு.டீ.வீரசிங்க, மொஹமட் முஸம்மில் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.