அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொறுமையாக ஆதரவளிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, முரண்பாடுகள் மற்றும் பதற்றமான நிலைமைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
கொரோனா பரவல் நிலைமை குறித்து சுகாதார தரப்பினர் பரிசோதனைகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கு பொதுமக்களின் பொறுமை மிகவும் முக்கியமானது என்றும் இதனால், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தொடர்ந்தும் பலர் கைதுசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 40 பேர் கைதுசெய்யப்பட்டதாக கூறினார்.
அத்துடன், கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை குறித்த குற்றச்சாட்டில் அடிப்படையில் 1,151 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.