
புரவி சூறாவளியை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடி உபகரணங்களும் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.
படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான பாதுகாப்பு அணை இல்லாத காரணத்தால் மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு மிகக் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதார முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெரும்பாலான மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளின் கரையோரங்கள் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புரவி சூறாவளியால் நெடுந்தீவு ஜே.1 தொடக்கம் ஜே.6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 112 மீனவ குடும்பங்களின் மீன்பிடி உபகரணங்கள் அழிவடைந்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சி.சத்தியசோதி தெரிவித்தார்.