January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 2 ஆவது கொரோனா அலை குறித்து விசாரணைகளில் ஈடுபட்ட 90 அதிகாரிகளுக்கு தொற்று

இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த 90 விசாரணை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உருவானமை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் கொத்தணிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸ் குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் 70 அதிகாரிகளுக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் 20 அதிகாரிகளுக்கும் கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைகளுக்கு ஏற்பவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சர் வீரசேகர பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக, 100 க்கு மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.