Photo: Twitter/ Srilanka Red Cross
கொரோனா தொற்றுக்கு உள்ளான 703 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 466 பேர் பேலியாகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என்பதுடன் , 237 பேர் சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,580 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 344 பேர் இன்றைய தினத்தில் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,804 ஆக உயர்வடைந்துள்ளது.
பெண் கைதிகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய போகம்பர சிறை
போகம்பர பழைய சிறைச்சாலை, பெண் கைதிகளுக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கந்தகாடு கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 663 பெண் கைதிகள், போகம்பர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் போகம்பர பழைய சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட 322 ஆண் கைதிகளை, ஆணையிறவு இராணுவ கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் மெகசின் சிறைக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையில் 49 கொரோனா தொற்றாளர்கள்
நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 295 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளவத்தையில் 49 பேரும், மட்டக்குளியில் 29 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கொம்பனி வீதியில் 7 பேரும் கொட்டாஞ்சேனையில் 21 பேரும் தெமட்டகொடயில் 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைக்கு அனுமதி
புதிதாக 5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வு மற்றும் பயிற்சிகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அன்றாடம் செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 13,000- 14,000 வரையான பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் கொரோனா அச்சம்
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இன்று சென்ற மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டுமே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.
இதனால் நோர்வூட் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு குறைவடைந்துள்ளது.
ஒரு சிலரே பாடசாலைக்கு வந்துள்ளனர். இந்நிலையிலேயே அவர்களும் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர், நோர்வூட் தமிழ் மகா பாடசாலை வளாகம் மற்றும் நோர்வூட் நகரம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு தற்காலிக பூட்டு
சுகாதாரப் பாதுகாப்பு நலனைக் கருத்திற்கொண்டு, நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
நோர்வூட் பகுதியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது மேற்படி தொழிற்சாலையில் பணிபுரிகின்றனரா என்பதைக் கண்டறிவதற்காகவும், அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவுமே தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளதாக, ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியில் 25 வயது யுவதிக்கு கொரோனா
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு – கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த இவர், கடந்த 25ஆம் திகதி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அதன் முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள், சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த யுவதியை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில்,ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.